அன்பு நண்பர் பொறியாளர் இர்ஃபான் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் 9 ஆண்டு காலம் பணியாற்றிய அமீரகத்திலிருந்து வேலையை மாற்றிக் கொண்டு கத்தார் நாட்டிற்கு செல்லவிருக்கிறார். 7 ஆண்டுகளாக என்னுடன் நட்பாக பழகியவர். நான் அமீரகத்தில் தமுமுக-வில் இணைத்துக் கொள்ள காரணமாக இருந்தவர். அஜ்மான் மண்டல தமுமுக மறுசீரமைப்புக்குப் பிறகு அமைந்த நிர்வாகத்தில் அவர் துணைத் தலைவராகவும் நான் செயலாளராகவும் செயல்பட்டோம்.

அல்ஹம்துலில்லாஹ்..அஜ்மானில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நாங்களே நடந்து சென்று மக்கள் உரிமை பத்திரிகையை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம். எனக்கு சில நேரங்களில் நடப்பதற்கு சிரமமாக இருந்தாலும் உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வார். நாங்கள் அஜ்மான் நிர்வாகத்தில் நடத்திய மருத்துவ முகாம்கள், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்றளவும் மக்கள் மனதில் பசுமையாக இருப்பதாக அவ்வப்போது சகோதரர்கள் தொடர்பு கொண்டு சொல்வார்கள். 2007-ம் ஆண்டு இருவரும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை மாற்றியதால் அவர் அபுதாபிக்கும் நான் துபாய்க்கும் மாறிவிட்டோம். களம் வேறு ஆனால் பணி ஒன்றுதான். அவர் அபுதாபியின் செயலாளராகவும் நான் அமீரகத்தின் துணைத்தலைவராகவும் எங்கள் பணியை தொடர்ந்தோம்.

அடிக்கடி அலைபேசி அழைப்புகள், அவ்வப்போது அமைப்பு நிகழ்ச்சிகள் என எப்போதுமே தொடர்பில் இருந்திருக்கிறோம். குடும்பம், சமூகம், பொருளாதாரம் என பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்பாக எங்களுடைய நட்பு அமைந்திருந்தது.

அமீரகத்தில் நடத்தப்படும் தமுமுக-வின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்களை ஒருங்கிணைக்கும் பணி, மீடியா மற்றும் இதர ஏற்பாடுகள் என எந்த பணியாக இருந்தாலும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்யக்கூடிய தன்மை இர்பானுக்கு உள்ளது. அமீரகத்தில் முதன் முதலில் மக்கள் உரிமை டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதும் அவர்தான், இன்றைக்கு பரவலாக தமுமுக-வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த டி-ஷர்ட்டை பார்க்கும்போது இர்பான்தான் நினைவுக்கு வருவார்.

மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இர்பான், இன்ஷா அல்லாஹ் இங்கிருந்து சென்றாலும் அவருடைய சமூக பணியை தொடர்ந்துக் கொண்டுதான் இருப்பார். அதற்கேற்ற உடல் வலிமையையும், மன வலிமையையும் வல்ல இறைவன் கொடுக்க வேண்டுமென பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.

நட்பில்,

ஹூசைன் பாஷா

09.09.2012