குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாக கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவுதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும்அமைந்துள்ளன.
2007 இல் இந்நாட்டின் மக்கட்தொகை 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.
இங்கே வசிக்கும் தமிழர்களில் பலரும் பல வித சமூக நல சேவைகளை பல்வேறு பெயர்களோடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் ஒன்று. இரத்ததான முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கு ஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளுக்கு உதவி என அவர்கள் செய்யும் சேவையின் பட்டியல் நீளுகிறது.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொறியாளர் ஜெய்லானி, சகோதரர் ஜலாலுதீன் ஆகியோர்களுடன் செய்த ஆலோசனைகள் மூலமாக என்னைப் பற்றித் தெரிந்துக் கொண்ட குவைத் மண்டலத் தலைவர் பேராசிரியர் தாஜ்தீன் அவர்கள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மக்களுக்கு பயன்தரும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம் என நினைத்துள்ளோம். தாங்கள் வரமுடியுமா எனக் கேட்டார்;.ஓரிருமுறை பேசிய பின்பு குவைத் நிகழ்ச்சியை உறுதி செய்தோம்.
இன்றைய காலகட்டத்திற்கு மக்களுக்கு மிகவும் அவசியம் என கருதிய நேர மேலாண்மை (இஸ்லாமிய பார்வையில்) என்ற பயிற்சி முகாமையும், அறிவரங்கம் என்ற விவாத நிகழ்ச்சியையும் 27.04.2012 அன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. துபாயிலிருந்து 26.04.2012, வியாழன் அன்று நான் செல்ல வேண்டிய விமானத்தில் தொழில் நுட்ப பிரச்சனை இருந்ததால் வேறு ஒரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அமீரக நேரம் மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய நான் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டேன்.
குவைத் விமான நிலையத்திற்கு குவைத் நேரம் 9 மணிக்கு சென்றடைந்தேன். சகோதரர்கள் தாஜ்தீன், டாக்டர் அலி மற்றும் சையது பாஷா ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். பரஸ்பர அறிமுகத்திற்கு பின்பு அங்கே நிகழும் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்தும் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளைக் குறித்தும் விளக்கமாக கூறினர். அதன்பின் வின்னர் ரெஸ்டாரண்ட் சென்று இரவு உணவை முடித்து விட்டு டாக்டர் அலி அவர்களின் இல்லத்தின் தங்கினேன்.
புதிய நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருப்பதனால் அதை நிறைவேற்றிடும் வகையில் நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக அனைத்து நிர்வாகிகளும் ஆங்காங்கே பரபரப்பாக பம்பரமாக சுழன்று களத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். முக்கிய நிர்வாகிகள் அவர்கள் இருக்குமிடத்திலிருந்தே அலைபேசியில் தொடர்பு கொண்டு சலாம் சொன்னவாறு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
27.04.2012 அன்று காலையில் பாலிவுட் ரெஸ்டாரண்ட் என்ற தமிழ் உணவகத்திற்கு நானும் பாஷாவும் சென்று காலை உணவை முடித்தோம். சாலையோரங்களில் குவைத் டவர், பாராளுமன்றம், மிஷாரி தொழவைக்கும் பள்ளிவாசல் என பல்வேறு இடங்களை பார்த்தவாறே நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்கு சென்று பார்வையிட்டோம்.. அங்கே ஊடகத்துறை செயலாளர் பீர் மரைக்காயர் தலைமையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. செயலாளர் முஜீப் துணைச் செயலாளர் அமானுல்லா கான் ஆகியோர் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்துக் கொண்டிருந்தனர். அதை பார்வையிட்டுவிட்டு ஜூம்ஆ தொழுகைக்கு சென்றோம். நைஜீரியாவைச் சேர்ந்த கத்தீபின் ஆங்கில உரை அருமையாக இருந்தது. அதை முடித்துவிட்டு ஒரு சில நாஃப் அமைப்பைச் சார்ந்த சகோதரர்களை சந்திவிட்டு மதிய உணவிற்கு தயாரானோம். தலைவர் தாஜ்தீன் அவர்கள் வங்கிச் சாலைக்கு அருகிலுள்ள பழமைவாய்ந்த ஈரானி உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். சுவையான சுட்ட மீன் மற்றும் ரொட்டி வகைகளை சாப்பிட்டுவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டோம்.
முதலில் நடைபெற்ற அறிவரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இரண்டு அணியாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள். சமுதாய முன்னேற்றத் தடைக்கு காரணம் நாமே என்று ஒரு அணியினரும், மற்றவர்களே என இன்னொரு அணியினரும் விவாதித்தார்கள். சகோதரர் அன்வர் அவர்கள் கொடுத்த கடுமையான பயிற்சி பேச்சாளர்களின் பேச்சில் தெரிந்தது.இறுதியில் நடுவர்களான பேராசிரியர் தாஜ்தீன் மற்றும் சமூக ஆர்வலர் மௌலவி சம்சுதீன் ஆகியோர் நாமே! என்ற அணிக்கு சாதகமான தீர்ப்பை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். நாம் இருப்பது குவைத்திலா அல்லது தமிழகத்திலா என்று நினைக்கும் அளவுக்கு இந்திய மற்றும் தமிழக அரசியலைக் குறித்து சகோதரர்கள் காரசாரமாக விவாதம் செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து காலம் என்ற நேர மேலாண்மை பயிற்சி முகாமை நான் நடத்த தொடங்கினேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நடந்த முகாமின் இறுதியில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் பலரும் வந்து பாராட்டு தெரிவித்தனர். வாழ்வில் இதுநாள் வரை எதையோ இழந்துவிட்டோம், இனி வரக்கூடிய காலங்களில் முறையாக எங்களுடைய நேரத்தை பயன்படுத்தி முன்னேறுவோம் என ஆர்வமாக கூறினார்கள். இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி ஏதாவது சாதிக்க வேண்டும் என ஒவ்வொருவரையும் நினைக்க வைக்க வேண்டுமென்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
நிகழ்ச்சிக்குப் பின் சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் துபாய் திரும்ப தயாரானேன். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஆர்வலர் மௌலவி சம்சுதீன் அவர்களை நிகழ்ச்சியில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இஸ்லாமிக் கைடன்ஸ் சென்டரின் நிர்வாகி இக்பால், தமிழ்நேசன் அமானுல்லாஹ்,குவைத் மண்டல இதஜ தலைவர் முகவை அப்பாஸ் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு பின் சந்தித்தார்கள். முன்பு துபையில் பணியாற்றிவிட்டு இப்போது குவைத்தில் வசிக்கும் சகோ. பெரோஸ்கான் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தார்.
எழுத்தாளர், மார்க்க அறிஞர், கல்வியாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு தளங்களில் அறியப்பட்ட தலைவர் தாஜ்தீன் அவர்களின் தலைமையில் ஆர்வமிக்க நிர்வாகிகளும், இளைஞர்களும் சமூக நலனுக்காக ஈடுபாட்டோடு இயங்கிக்கொண்டிருப்பதை காண முடிந்தது.
நிகழ்ச்சிக்காக சென்று ஒருநாள் மட்டுமே அவர்களோடு இருந்திருந்தாலும் அவர்கள் காட்டிய அன்பு நெகிழ வைத்தது. எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் எண்ணங்களை ஈடேற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.
அன்புடன்,
ஹூசைன் பாஷா