த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டலம் நடத்திய மண்டலம் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பிய்யா) வெள்ளிக்கிழமை தம்மாமில் நடைபெற்றது.
மாநில ம.ம.க. துணைத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் முகாம் சரியாக காலை 10.00 மணி அளவில் தொடங்கியது. கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்தி,முகாமின் குறிக்கோளை எடுத்து வைத்து முகாமைத் துவக்கி வைத்தார்.
அடுத்து தலைமை உரை நிகழ்த்திய தமிழக மாநில ம.ம.க. துணைத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் தனது உரையில் இந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கக் கூடிய நாம் இந்த பொறுப்புகளை பதவிக்காகவும், பெருமைக்காகவும் ஏற்கவில்லை என்பதையும். இதன் மூலம் சமுதாய நலனையும், நாளை மறுமையில் வெற்றியாளர்களாக ஆகவேண்டும் என்பதையும் நோக்கமாக கொண்டே பொறுப்பு வகிப்பதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து தர்பியா பொறுப்பாளரும் மண்டல துணைச் செயலாளருமாகிய பொறியாளர் ஜக்கரியா அவர்கள் இந்த முகாமின் நோக்கத்தை எடுத்து வைத்தார்கள்.நம்மிடையே இருக்கும் இந்த பிணைப்பு சமுதாயப்பணியின் மூலம் நம்மை இணைக்கின்றது. மேலும் உலகத்தில் யாரென்றே அறியப்படாத ஒரு சமூகமான முஸ்லிம் சமூகம் இன்று உலகமே அறியக்கூடிய சமூகமாக மாறியதற்கு காரணம் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் அளித்த பயிற்சியின் மூலம் பெற்ற பாடம்தான் என்றால் மிகையாகாது. நம்மிடையே யார் யாருக்கு எந்த திறமை உள்ளதோ அதற்கு பயிற்சி பெற்று நன்றாக கற்றுணர்ந்து ஒரு கூட்டமாக செயல்பட்டோமானால் நாம் பல நல்ல சாதனைகளை செய்யமுடியும்.
மேலும், நமக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளுக்கு (திறமைகளும் அருட்கொடைதான்) நாம் கண்டிப்பாக மறுமையில் பதிலளிக்கவேண்டும் என்பதை நம் மனதில் நிறுத்தவேண்டும், நாம் அந்த அருட்கொடைகளை உலக வாழ்க்கையில் மட்டும் பயன்படுத்தாமல் மறுமைக்காக மார்க்கவிஷயங்களிலும், சமுதாய நன்மைக்காகவும், நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கும் பயன்படுத்தவேண்டும் — எனக் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
அதை தொடர்ந்து, மண்டல நிர்வாகியும் தர்பியா பொறுப்பாளர்களில் ஒருவருமாகிய மௌலவி ஆத்தங்கரை அலாவுதீன் பாக்கவி அவர்கள் வணக்க வழிபாடுகளில் நாம் செலுத்த வேண்டிய கவனம் குறித்து விவரித்தார்கள். இந்த உலகத்தில் நாம் எதை பெறவேண்டும் என்றாலும் எதையாவது கொடுத்துதான் பெறவேண்டியுள்ளது அதுபோல் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் அருட்கொடைகளுக்கு நாம் அவனுக்கு தஸ்பீஹ் செய்வதன் மூலம் நன்றி செலுத்தவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நமது ஒவ்வொரு மூட்டிற்கும் நாம் தஸ்பீஹ் செய்யவேண்டும் அதற்கு நாம் தினமும் காலையில் இரண்டு ரக்கஅத்துகள் லுஹா தொழுகையின் மூலம் நிறைவு செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் நாம் எந்த செயலை செய்ய தொடங்குவதற்கு முன் வல்ல நாயனிடம் துஆ செய்துவிட்டு தொடங்கவேண்டும் அவ்வாறு செய்வோமானால் நமக்கு வெற்றி கிட்டும் என்பதை மனதில் நிறுத்தவேண்டும்.
மேலும், பொறுப்புக்களை ஏற்றுகொள்வதும் ஒரு இபாதத்துதான் நாம் ஏற்ற பொறுப்பை செம்மையாக செய்யவில்லை என்றால் நாளை பதில் சொல்லவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், ஒரு பொறுப்பை ஏற்றுகொண்டால் அதை முதலில் முடிக்கவேண்டும் என அனஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள் மேலும், அல்லாஹ் நம் மீது கடமையாக ஆக்காத ஒன்றை நாம் எண்ணிவிட்டால் அதை கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும், மேலும் ஒரு செயலில் வெற்றி கிடைத்தாலும், தோல்வி கிடைத்தாலும் அதன் மூலம் நன்மையே என இஹ்லாசுடன் பணியை செய்யவேண்டும், மேலும் நமக்கிடையே உள்ள கசப்புகளை மறந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும் எனவும் சபையோர் அனைவரிடமும் நாளை முதல் லுஹாத் தொழுகையை தவறாமல் தொழுவோம் என்னும் உறுதிமொழியையும் பெற்றுக்கொண்டு தனது உரையை முடித்து கொண்டார்கள்.
அதை தொடர்ந்து மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளின் பொறுப்புகளையும், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் நமது இயக்க விதிகளையும் மண்டலத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் விரிவாக விவரித்தார்கள் மேலும் நாம் இங்கு அமைத்திருக்கும் ஆறு அணிகள் பற்றியும் அவர்களின் பொறுப்புகள் பற்றியும் எடுத்து வைத்தார் மேலும் பொறுப்பாளர்கள் அனைவரும் தமது பொறுப்பை உணர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு இயக்க பணிகளை மேம்படுத்தவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
தொடர்ந்து மண்டலத் துணைத் தலைவர் சகோ. இஸ்மாயில் அவர்கள் பொறுப்பு சுமக்கக் கூடிய நாம் எவ்வாறு நடந்து (சுயபரிசோதனை செய்து) கொள்ளவேண்டும் என விவரித்தார் அதாவது, நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள் உங்கள் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள் (புஹாரி) என்னும் ஹதீசுக்கு ஏற்ப அது அமானிதம் என்பதால் இதில் பொறுப்பாளர்கள் நாளை மறுமையில் அந்த பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவோம். பொறுப்பாளர்கள் யாரை திருப்திபடுத்த செயல்படுகின்றோம் என எண்ணிப்பார்க்கவேண்டும் அது அல்லாஹ்வை திருப்தி படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். ஷைத்தான் நாம் செய்யும் இபாதத்துகளையும், பொறுப்புகளையும் வீணடிப்பதற்கு பெரும் முயற்சி செய்வான் அதை முறியடிக்க அதில் நாம் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். மேலும் மனத்தூய்மையுடனும், அல்லாஹ்வின் உதவியை நாடியவர்களாகவும் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்முடைய பொறுப்பை சரிவர செய்யமுடியும் என்பதை மனதில் நிறுத்தவேண்டும். பொறுப்பு என்பது அமானிதம் மட்டுமல்லாமல் அது ஒரு அருட்கொடையும் ஆகும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து மனனப் பயிற்சிக்கான மூன்று துஆக்கள் அடங்கிய பிரசுரம் வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டு அதை இன்ஷா அல்லாஹ் இரண்டாம் அமர்வில் ஒப்புவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு முதல் அமர்வு முடித்து கொள்ளப்பட்டது.
சதக்காவின் சிறப்புகள் என்ற தலைப்பில் தர்பியா குழுத் தலைவர் சகோ.ஜக்கரியா அவர்கள் மிகச்சிறப்பாக ஜூம்மா உரை நிகழ்தினார்.
ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் தொடங்கிய இரண்டாம் அமர்வில் மண்டல ம.ம.க. செயலாளர் சகோ. அப்துல் அளீம் அவர்கள் தடையின்றிப் பேச எனும் நிகழ்ச்சியை சகோ. நிஸாருடன் இணைந்து நடத்தினார். நமது மேடைப் பேச்சை எவ்வாறு ஆரம்பம் செய்யவேண்டும், அதில் நமது முக பாவனைகள் எப்படி இருக்கவேண்டும், கை அசைவுகள் பேச்சுக்கு தகுந்தாற்போல் எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும், எதை எதையெல்லாம் தவிர்த்துகொள்ளவேண்டும் எனவும், நாம் எடுக்கும் தலைப்பின் கீழ் எவ்வாறு பேச்சை ஆரம்பித்து கோர்வையாக கொண்டு சென்று அதை எவ்வாறு முடிக்கவேண்டும் எனவும் மிக அழகாகவும், சாதுரியமாகவும் விளக்கினார்.
தொடர்ந்து கிளைவாரியாக சகோதரர்கள் அழைக்கப்பட்டு பேசவைக்கப்பட்டனர் அதில் அவர்கள் செய்த தவறுகளையும் அவர்களின் பாவனைகளையும் நெறிப்படுத்தி வரும் காலங்களில் தங்களை மேலும் எவ்வாறு செம்மைப்படுத்திகொள்ளவேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.
தொடர்ந்து தமிழக மாநில ம.ம.க. துணைத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் நிறைவுரையாக நிர்வாகிகள் இயக்க சகோதர்களிடமும் சக பொறுப்பாளர்களிடமும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து செயல்படவேண்டும் எனவும் அதில் அல்லாஹுத்தாலா வெற்றியை தருவான் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் இறுதியாக பொறியாளர் ஜக்கரியா அவர்கள் நமது நட்பை நாம் மார்க்க அடிப்படையில் எவ்வாறு அமைத்து கொள்ளவேண்டும் என்றால் அல்லாஹ் தனது இறைமறையில் நிழலே இல்லாத அந்த தீர்ப்புநாளில் சிலருக்கு நிழல்தருவதாக வாக்களிக்கின்றான் அது நம்மைப்போன்ற அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் நட்பை பேணக்கூடிய இருவருக்கு நிழல் தருவதாக கூறுகின்றான் அந்த நிழலுக்குரிய பாக்கியவான்களாக ஆகவேண்டும் எனவும், அனைவரிடத்திலும் நளினத்துடனும், நல்லெண்ணத்துடனும் அணுகவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இறுதியாக மண்டலச் பொருளாளர் கழகக் கவி சகோ. நஸ்ருத்தீன் சாலிஹ் அவர்கள் மண்டலத்தின் அழைப்பை ஏற்று பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த அனைவருக்கும் நன்றியுரை கூற துஆவுடன் கூட்டம் அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் இனிதே நிறைவுற்றது.
எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே.
செய்திதொகுப்பு:
அப்துல் குத்தூஸ் & சீனி முஹம்மது