அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
இயக்க ரீதியாக மட்டுமல்லாது உமர் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாளர் என்ற அடிப்படையிலும் அதிகமாக உமருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. விபத்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். விபத்து நடந்த இடத்தில் உடனிருந்த தமிழ் என்னைத் தொடர்பு கொண்டு சார் உமர் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார் ஆம்புலன்ஸ் அழைத்துள்ளோம் எனக்கு பயமாக இருக்கிறது உடனே வாருங்கள் எனக் கூறினார். என்னுடைய அலுவலை பாதியிலே விட்டுவிட்டு உடனடியாக ஷார்ஜாவை நோக்கி வந்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் பொதுமேலாளரை தொடர்பு கொண்டு விஷயத்தை அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டு வரும் வழியில் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தேன். வரும் வழியில் அவரை எடுத்துச் செல்லும் குவைதி மருத்துவமனையில் பணியாற்றும் தமிழ் சகோதரர்களை தொடர்புகொண்டு சம்பவத்தைச் சொல்லி ஆம்பலன்ஸ் வந்தவுடன் முதல் உதவி செய்யுமாறும் அதிக கவனத்துடன் இருக்குமாறும் கூறினேன். மருத்துவமனைக்கு முன்னால் உள்ள குர்ஆன் ரவுண்ட்அபவட் சிக்னலில் நிற்கும்போது தமிழின் போன் வருகிறது. எதுவும் தீய செய்திவந்து விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டே போனை எடுக்கிறேன்..உமர் இறந்துட்டார் சார் என தமிழ் அழுகிறார். என்ன தமிழ் சொல்றீங்க டாக்டரா சொன்னார் எனக் கேட்டேன், ஆமாம் கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக சொல்கிறார் சார் என அழுதார். சிக்னலில் நின்றுக் கொண்டு இருந்தாலும் கவனம் முழுக்க கைபேசியில் இருந்ததால் கண்களில் கண்ணீரோடு ஒரு நிமிடம் உடல் உறைந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. மனதை திடப்படுத்திக் கொண்டு மருத்துவமனை வரை சென்று உமரின் உடலைப் பார்த்தேன்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட சைலன்ஸ் எடுப்பதற்காக என்.ஓ.சி. கேட்டிருந்தார் எழுதிக் கொடுங்கள் ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லியிருந்தேன், அதற்கு முன் இப்படி. கடந்த மாதம் துபாய் மர்கஸில் நான் சொற்பொழிவாற்ற சென்றிருந்தபோது உமரும் என்னுடன் வந்தார் நிறைய விஷயங்களைப் பற்றி இருவரும் உரையாடிக் கொண்டு சென்றோம். அதன்பின் நண்பர்கள் யாசிர், ரைஸ், ஹாரிஸ், ஆகியோருடன் மம்சார் பார்க் சென்று இரவு உணவை முடித்துவிட்டு வந்தோம். ரமலானில் இஸ்லாமிய மாநாட்டை ஷார்ஜாவில் நடத்திய போது தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வெகுதூரம் தன்னுடைய டூல் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு நடந்தே வந்து உரையை கேட்டிருக்கிறார் என்று தெரியவந்தது அதன்பின் கூட்டம் முடிந்தபின் நான் வாகத்தில் அழைத்துச் சொன்று அவருடைய ரூமில் விட்டுவிட்டு வந்தேன்.
என்னுடன் இருக்கும் அலுவலக மற்றும் இயக்க ரீதியான புகைப்படங்களில் அவர் இருப்பதை பார்க்கும்போது அவர் என்னுடம் பேசுவதைப் போன்ற உணர்வே மேலிடுகிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் பொறுமையைக் கொடுக்க வேண்டும் எனவும், அவருடைய எல்லா பாவங்களையும் மன்னித்து அல்லாஹ் உமருக்கு உயரிய சொர்க்கத்தை தரவேண்டும் என்றும் பிராத்திக்கிறேன்.
நட்புடன்,
ஹூசைன் பாஷா