உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா–வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில் செய்யவேண்டியவற்றைக் குறித்து இம்முகாமில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சூழ்நிலைகளையும், மனிதர்களையும் வௌ;வேறு கண்ணோட்டத்தில் பார்த்து முடிவுளை எடுத்தல், கோபம், தாழ்வு மனப்பான்மையை நீக்கி அன்பானவர்களாக மாற்றிக் கொள்ளுதல், எண்ணத்தை வளப்படுத்தி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் முறைகள் குறித்து பயிற்சியாளர் பெண் பொறியாளர் ஷாமிலா அவர்கள் சிறப்பான முறையில் பயிற்சியளித்தார்.
தங்களுடைய உறவினர்கள், நண்பர்களிடம் இதுநாள் வரை இருந்த உறவுமுறை இனி பலப்படும் என்றும், வாழ்வில் பல விதமான நல்ல வகையான மாற்றத்திற்கு இந்த பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருந்தது எனவும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் கருத்துகள் தெரிவித்தனர். தங்களின் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளிலிருந்து மகிழ்ச்சியான நிலைக்கு வர இம்முகாம் பயனுள்ளதாய் அமைந்தது என பெண்கள் கண்ணீர்மல்க கருத்து தெரிவித்தனர்.
கலந்துக் கொண்டவர்களுக்கு தேவையான குறிப்பேடுகள், சிற்றுண்டி ஆகியவற்றை ஜம்ரத் ஜாஹீர், ரயான் அப்துல் ராஷித், பௌசியா ஜாஹீர் ஆகியோர் கொண்ட குழு வழங்கினர். தமுமுகவின் ஷார்ஜா மண்டலம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலத் தலைவர் அபுல் ஹசன், அமீரக செயற்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் இக்பால் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யவிருப்பதாக நிகழ்ச்சியின் இயக்குநர் ஹூசைன் பாஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.