அல்லாஹ்வின் திருப்பெயரால்.. ..
அண்ணலாருக்கு எதிராக அவதூறா? – பொறியாளர் ஜக்கரிய்யா
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !
பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.
டென்மார்க்கின் கார்ட்டூன்,
அமெரிக்காவில் வெளிவந்த சினிமா,
பிரான்சு நாட்டில் வெளி வந்த கார்ட்டூன் — போன்றவைகள் நபிகளாரைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பரப்புகின்றன. நற்பண்புகளுக்கும், நேர்மைக்கும், புகழுக்கும், உயர்ந்த மரியாதைக்கும் சொந்தக்காரரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இப்படியும் குறை சொல்லக்கூடியவர்கள் இருக்க முடியுமா ??? என்று நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதர் என்று பிரகடனம் செய்தார்கள். நாற்பதாவது வயதுவரை அந்த சமுதாய மக்கள் அவர்களை ஒரு சிறந்த மனிதராகவும், தங்களுக்கு மத்தியில் மிகவும் உண்மையாளராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் மதித்து வந்தார்கள்.
அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு உரியவர்களில்லை என்ற கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தபின் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில் நபிகளாருக்கு எதிராக இணைவைப்பாளர்கள் தீட்டிய திட்டத்தைப் பின் வருமாறு நபிகளாரைப் பற்றிய ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல் “ரஹீக்” குறிப்பிடுகிறது:
நபிகளாரின் வாழ்வில் நடந்த சதி:
“”…இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் ‘
இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்" என்று கூறினான். அம்மக்கள் ‘நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்" என்றனர். அவன் ‘இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்" என்றான்.
குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: ‘இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை."
குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.
குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?
வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.
குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஓதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.
குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?
வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை–மகன், கணவன்–மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)”.மேற்கூறப்பட்ட சம்பவத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் …
முஹம்மது நபியின் பிரச்சாரத்தை ஆதாரங்களைக் கொண்டோ, கருத்து பரிமாற்றங்களைக் கொண்டோ, தர்க்க ரீதியான வாதங்களைக் கொண்டோ எதிர்க்க முடியாது என்பதையும், முஹம்மது நபியின் வார்த்தைகளைச் செவியேற்கக்கூடிய நடுநிலையாளர்கள் முஹம்மது நபியை உண்மையான தூதர் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் விளங்கிக்கொண்ட முஷ்ரிகீன்கள் முஹம்மது நபிக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக அவதூறுகளையும், இழிவுகளையும்,
பொய்களையும் பரப்புவதை இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்குறிய முக்கியமான யுக்தியாக பயன்படுத்தினார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த குறைஷிகள் இஸ்லாமிய அழைப்புக்கு எதிராக கையாண்ட வழிமுறைகளின் சுருக்கத்தை “ரஹீக்” பின்வருமாறு குறிப்பிடுகிறது:
1. இஸ்லாத்தைப் பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்.
2. இஸ்லாத்தைப் பற்றி சந்தேகத்தைக் கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கி விடுவதும்.
3. முன்னோர்களின் கட்டுக் கதை என்று கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது போன்றவைகளாகும்.
இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம்:
நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குறைஷிகள் நபிகள் நாயகத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள், நம்மைவிடவும் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளையும், உண்மைத்தன்மையையும் அறிந்திருந்தார்கள். இது எதுவும் நபிகள் நாயகத்தைப் பற்றி மனமுரண்டாக அவதூறு பரப்புவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை.
இதை வலீதின் கூற்று தெளிவுபடுத்துவதை கவனியுங்கள்:
“நீங்கள் நபியைப் பற்றி எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு அதன் மூலம் தந்தை–மகன், கணவன்–மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறார் என்றே கூறுங்கள்“
நவீன காலத்தில் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நபிகளாரைப் பற்றிய உண்மைகளை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே இன்று இஸ்லாத்தின் வளர்ச்சியை வெறுக்கும் இவர்கள், நவீன ஊடகங்கள் மூலமாக நபிக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தைச் செய்வது, இஸ்லாத்திற்கு எதிராக பீதியைப் பரப்புவது போன்ற அதே பழைய யுக்திகளைத்தான்; இன்றும் கையாண்டு வருகிறார்கள்.
இஸ்லாத்திற்கும், நபிக்கும் எதிராக அவதூறுப் பிரச்சாரத்தைச் செய்வதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை எவ்வித மாறுபாடும் இல்லாமல் தனித்துவத்தோடு பின்பற்றி வருவதையும், மற்றவர்களைப் போல் தங்களது அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதையும் இஸ்லாத்தை மறுப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுமாகும்.
இவர்களின் ஆதங்கத்தை அல்லாஹ் இவ்வாறாக கூறுகின்றான்:
فَلا تُطِعِ ٱلمُكَذِّبِينَ (٨) وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ
எனவே (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால் (விட்டுக் கொடுத்தால்), தாங்களும் தளர்ந்து (விட்டுக்கொடுத்துப்) போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். (அல்குர்ஆன் 68:8,9)அவதூறு பிரச்சாரம் பற்றி திருக்குர்ஆன்:
நபிகளாருக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறு பிரச்சாரங்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)
பொதுவாகவே எல்லா இறைத்தூதர்களும் பரிகசிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது. (அல்குர்ஆன் 21:41)
முஸ்லீம்களை நிராகரிப்பவர்கள் பரிகசிப்பார்கள் என்பது பற்றி திருக்குர்ஆன்:
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். (அல்குர்ஆன் 83:29,30)
அவதூறு பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்:
இப்படிப்பட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகின்றபோது எப்படி அதை எதிர் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ{தஆலா பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.
وَٱصبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهجُرۡهُمۡ هَجرً۬ا جَمِيلاً۬ () وَذَرۡنِى وَٱلمُكَذِّبِينَ أُوْلِى ٱلنَّعمَةِ وَمَهِّلهُمۡ قَلِيلاً() إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான – முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக. என்னையும், பொய்ப்பிப்பவர்களாகிய அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடும். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக. நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன (அல்குர்ஆன் 73:10-12)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் …
ஆதலால் உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள் (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸ{ஜுது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (அல்குர்ஆன் 15:94-99)
முஃமீன்கள் கடுஞ்சொற்களையும், நிந்தனைகளையும் செவியேற்க நேரிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا ۚ وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் 3:186)
இந்த குர்ஆன் வசனங்கள் கீழ்வரும் உண்மைகளைத் தெளிவு படுத்துகின்றன:
1. இறைமறுப்பாளர்கள்; அவதூறுப் பிரச்சாரங்களின் மூலமாக நபிகள் நாயகத்தையும், முஸ்லீம்களையும் மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி முஸ்லீம்களின் இறைப் பணியை வீரியம் இழக்கச் செய்யவேண்டும், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று நாடுகிறார்கள்.
2. இறைமறுப்பாளர்கள் செய்யும் அவதூறுப் பிரச்சாரம் நபியவர்களுக்கும், அதே போல முஸ்லீம்களுக்கும் மனநெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான்.
3. நிராகரிப்பாளர்களைப் பொருட்படுத்தாமல், உங்களுக்கு ஏவப்பட்ட மார்க்கப்பணியைத் தொய்வின்றி செய்து வாருங்கள். அவர்களது பொய் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் உங்களை மார்க்கப் பணியிலிருந்து திசை திருப்பி விட வேண்டாம்.
4. இப்படிப்பட்ட சூழல்களில், பொறுமையை மேற்கொள்ள வேண்டும், மேலும் இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு சிரம் பணிய வேண்டும்;.
5. முடிவாக, இங்ஙனம் பரிகாசம் செய்பவர்களை கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு தக்க தண்டனைகளைக் கொடுப்பதற்கும் அல்லாஹ்வாகிய தானே போதுமானவன் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாட்சியங்கள்:
இன்னும் உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
மேலும் (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(அல்குர்ஆன் 68:3,4)
மேலும் நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.(அல்குர்ஆன் 94:4)
முஹம்மது நபியின் நபித்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் வாக்குறுதி:
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا
அல்லாஹ் இந்த இறைத்தூதரை எதற்காக அனுப்பினான் என்றால் …
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (அல்குர்ஆன் 48:28)
மற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகின்றான்,
இணைவைப்பாளர்கள் எவ்வளவுதான் வெறுத்தபோதிலும், இந்த நபியை நேர்வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பியக் காரணம், இந்த மார்க்மாகிய இஸ்லாம் அனைத்துக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மிகைத்து விடுவதற்காகத்தான். இதற்கு அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
ஆகவே, இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களால் இஸ்லாத்தின் ஒளியை அணைத்துவிடலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் ஒருப்போதும் வெற்றி பெற்றதில்லை. இனியும் வெற்றி பெறப் போவதில்லை. இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக இஸ்லாம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, பலர் இஸ்லாத்தின் உண்மையை ஏற்றுக் கொண்டுவருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?
நற்பண்புகளின் தாயகமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பரப்பப்படும் அனைத்து பொய்களையும், அவதூறுகளையும், கேலிகளையும், அசிங்கங்களையும் வன்மையாகக் கண்டித்து, முஹம்மது நபியை உயிரை விட அதிகமாக நேசிக்கிறோம் என்பதை உலகளாவிய அளவிலே சாத்வீகமான முறைகளில் தெளிவுபடுத்தும் அதே வேளையில், நாம் கவனத்தோடு செயல்படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களும் இருக்கின்றன.
அவைகள்:
நபியைப் பற்றிய உண்மையை உலகுக்கு உணர்த்த அருமையான வாய்ப்பு:
இன்றைய பரபரப்பான சூழலில், அனைவரின் கவனமும் முஹம்மது நபியைப் பற்றி திரும்பியிருக்கின்ற நிலையில், உண்மையில் இந்த முஹம்மது நபி யார்? அவர்களது நற்குணங்கள் எப்படிப்பட்டது, அவர்களது எளிமை, தலைமை, வழிகாட்டுதல் போன்றவைகள் எப்படிப்பட்டது என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்திக்காட்ட அருமையான வாய்ப்பாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நபிக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை மறுத்து உண்மையை நிலை நாட்ட நாம் தயாரா?
நபிகளாரைப் பற்றிய சிறப்புகளை இந்த மறுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமே!, இவைகளையெல்லாம் தெரியாமல் தங்களது வாழ்நாளை வீணடிக்கிறார்களே! என்று ஆதங்கப்படக்கூடிய நாம் உண்மையில் நபிகள் நாயகத்தின் சிறப்புகளைத் தெரிந்திருக்கிறோமா? அவர்களது வாழ்க்கை வரலாற்றைக் கற்றிருக்கிறோமா? அவர்களது வழிகாட்டுதல்களை புரிந்திருக்கிறோமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று உலகுக்கு பறைசாற்ற தயாராக இருக்கும் நாம், உண்மையில் அவர்களைப் பற்றி சரியாக தெரிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்வரும் முக்கியமான சிறப்புகளில் எவைகளை நாம் தெரிந்திருக்கிறோம் என்று உளப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்:
• நபியின் ஆன்மீக வழிகாட்டுதலும் அதன் சிறப்புகளும்.
• நபியின் இறைபக்தி மற்றும் இறைவழிபாடுகள்
• நபியின் ஆட்சி மற்றும் அரசியல் தலைமை
• நபியின் போர்த் தலைமை மற்றும் அதில் கையாண்ட மாண்புகள்.
• எல்லா காலகட்டத்திலும் அவர்கள் கடைபிடித்த எளிமை மற்றும் பற்றற்ற தன்மை.
• நபிகளாரின் பணிவு, கனிவு மற்றும் ஈகை
• நபிகளார் கொண்டு வந்த சமூகப் புரட்சி, சமத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள்
• நபிகளார் கொண்டு வந்த ஆன்மீக, அரசியல், சமூகவியல் மற்றும் பொருளாதார சட்டதிட்டங்கள்
• நபிகளாரின் குடும்ப வாழ்வு மற்றும் வழிகாட்டுதல்
• நபிகளார் கொண்டு வந்த திருக்குர்ஆனின் சிறப்பு மற்றும் அதன் அற்புதத்தன்மைகளின் பல பரிமாணங்கள்
• இறைவனால் நபிக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்துகள் மற்றும் சிறப்புகள் …
… மேற்குறிப்பிடப்பட்டவைகளில் சிலவற்றையாவது சரியான முறையில் தெரிந்திருக்கவில்லையென்றால் நாம் எப்படி இஸ்லாத்தைப்பற்றி அறியாத மற்றவர்களுக்கு நபிகள் நாயகத்தின் சிறப்புகளையும் உண்மைகளையும் தெளிவுபடுத்த முடியும்? ஆகவே உடனடியாக நபிகளாரைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
ஓவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும், கூட்டங்களிலும், அமைப்புகள் மூலமாகவும், நமக்கு இருக்கக்கூடிய பல்வேறு ஊடகங்களின் மூலமாகவும் நபிகளாரைப் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறோம். நபிகளாருக்கு எதிராக அவதூறுகள் பரபரப்பாக பரப்பப்படும் சூழல்கள் நபிகளார் யார் எனபதை உலகுக்கு பறைசாற்ற நமக்கு இரட்டிப்பான உத்வேகத்தைத் தரவேண்டும்.
நபியை நாம் எப்படி நேசிக்கிறோம்?
நபியை முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான்:
النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; ..(அல்குர்ஆன் 33:6)
மேலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்,
அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் நபியை முழுமையாகப் பின்பற்றுவதுதான். இதை திருக்குர்ஆன் இவ்வாறாக குறிப்பிடுகிறது:
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
(நபியே!) நீர் கூறும் ”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருகின்றான். (அல்குர்ஆன் 3:31)
நபியை நேசிக்கிறோம் என்று பிரகடனம் செய்யும் நாம், முஹம்மது நபியின் வழிகாட்டுதலை எந்த அளவுக்கு பின்பற்றுகிறோம் என்று சிந்தித்துப் பார்க்க இப்படிப்பட்டச் சூழல்கள் தூண்டவேண்டும். நமது செயல்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன. நமது செயல் பாடுகளைப் பார்த்து நமது தலைவராகிய நபிகள் நாயகத்தைப்பற்றி யாராவது எடைபோட நினைத்தால், நபியைப் பற்றி சரியான முறையில் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
நமது செயல்பாடுகள் நபிகள் நாயகத்திற்கு உரிய அந்தஸ்தை தருவதாக இருக்கிறதா அல்லது நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக உணர்ந்து கொள்வதற்கு தடையாக இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உண்மையில் நாம் நமது நடவடிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், கொடுக்கல் வாங்கல்களையும், சமூக, குடும்ப மற்றும் தனி வாழ்;க்கையையும் சீர்படுத்த வேண்ய கட்டாயத்தில் உள்ளோம் என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.
இறுதியாக …
நபிகள் நாயகத்தைப் பற்றி கற்றுத்தெரிந்து கொள்ளவும், அவர்களைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு உரைக்கவும் நமது செயல்பாடுகளை சீர்திருத்திக் கொள்ளவும் நாம் அனைவரும் முன் வரவேண்டும்.
அல்லாஹ் நமது செயல்பாடுகளை அவனுடைய திருப்பொருத்தத்திற்குரிய செயல்பாடுகளாக பொருந்திக்கொள்வானாக!
ஆமீன்.