துபாய் அரசாங்கத்தின் இஸ்லாமிய விடயத் துறையின் சார்பில் அழைப்புப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பல்சுவை நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் வகையில் 15.06.2012, வெள்ளிக் கிழமை மாலை அன்று தமிழ் மொழி பிரிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதிரை அப்துல் ஹாதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாணவர் ஹிஷாம் ஜாபர் அலி கிராஅத் ஓதி தொடக்கிவைத்தார்.

தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள சென்னை தாருல் ஹூதா நிறுவனத்தின் நிறுவனர் அறிஞர் முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் குறித்து திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் நெறிகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுச் சான்றுகளுடன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதிதாக இஸ்லாம் கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதர்கள் யாசிர், யாசீன் ராஜீவ் காந்தி, அப்துல்லாஹ், முஹம்மது மதி ஆகியோர் தங்களை இஸ்லாம் எவ்வாறு கவர்ந்தது என்பதைக் குறித்து நெகிழ்ச்சியோடு பேசினார்கள்.

நவீன உலகில் அழைப்புப் பணியை செய்யும் முறைகளைக் குறித்து வெண்திரையின் வாயிலாக ஹூசைன் பாஷா அவர்கள் விளக்கினார், அதனைத் தொடர்ந்து அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்துக் கொள்ளவேண்டுமென முஹம்மது மஃரூப் அவர்கள் எடுத்துரைத்தார்.

அழைப்புப் பணியில் ஏற்படும் ஐயங்களை போக்கும் வகையில் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது, அதில் துபாய் இஸ்லாமிய வங்கியின் உயரதிகாரி ஜாபர் அலி, முஹம்மது மஃரூப், ஆகியோர்களுடன் முஃப்தி உமர் ஷரீப் அவர்கள் பங்கேற்று பல விளக்கங்களை அளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களிடம் இஸ்லாம் சம்பந்தமான வினாக்கள் கேட்கப்பட்டு சரியாக விடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அழைப்புப் பணியில் அனைவரையும் ஈடுபட உற்சாகமளித்த இந்நிகழ்ச்சி அமீரகங்களின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திரளாக கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் முன்வைத்தனர்.

தமுமுக உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!