'கடல் கடந்த பறவைகள்' – ஆவணப்பட விமர்சனம்

தூரக்கடலை கடந்து வந்த பறவைகள் துயரக்கடலில் தத்தளிப்பதை மிகுந்த வலியோடு சித்தரிக்கின்றது இந்த ' கடல் கடந்த பறவைகள் ' பதிமூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி வணிகத்துக்காக புலம்பெயர்ந்த தமிழர்களை மேலை நாட்டு ஆதிக்கச் சக்திகள் அடிமைபடுத்தும் அவல சம்பவத்திலிருந்து அதிர்வலைகளை கிளப்புகின்றது இந்த ஆவணப்படம்.

இளமையில் அதிகம் பொருள் ஈட்டினால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழலாம் என்று ஆசையில் தூரதேசம் பயணப்பட்டவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தாங்கள் இழந்த இளமையை பெறமுடியாது என்பதை வேதனையோடு உணர்த்துவதாய் படக்குழுவினர் காட்டியிருப்பது நிதர்சனம்!

'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்று சொந்த நாட்டின் சுரம் பாடிவிட்டு எண்ணை வளம் உள்ள பல நாட்டின் பாலைவெயிலில் வெந்து தன் சிறகுகளை கருக்கிக்கொண்டதன் நெடி இந்தப்படம் முழுதும் நிறையவே அடிக்கின்றது.

கட்டிடத்தொழில்,தோட்டவேலை, அலுவலக உதவியாளர், தட்சர்பணி மற்றும் சாலைப்பணிகளில் தங்கள் உடலையும் உள்ளதையும் கடுமையாக வருத்திகொண்டு உழைக்கும் நம் தோழர்கள் கூறும் கண்ணீர் கதைகள் நம் சதைகளை குத்திக்கிழித்து இதயத்தை தொடுகின்றன.

இந்த ஆவணப்படத்தை காணும்போது அரபு தேசத்தில் கிடைக்கும் பெட்ரோலை விட இவர்கள் உழைத்து சிந்திய வியர்வைகளே அதிகம் என்று அனைவருக்கும் எண்ணத்தோன்றும்.

தாய்நாட்டில் தன் உறவுகள் யாரும் காண்ணீர் சிந்திவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் அயல் நாட்டில் இரத்தம் சிந்தவும் தயாரகிவிட்டதற்கான காரணங்களையும் காட்சிகளாக காட்டியிருக்கிறார்கள். வாழ்வியல் சூழலாலும் உளவியல் காரணங்களாலும் இவர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டு தன் உறவுகளுக்காக இவர்கள் செய்யும் தியாகம் நியாயமாகவேபடுகின்றது.

இந்த ஆவணப்படம் இவர்களின் கண்ணீருக்கு கைக்குட்டை கொடுப்பதை தவிர்த்துவிட்டு கைகொடுத்து மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு துணைநிற்கிறது.பெரும்பான்மையான வெளிநாடுகளில் 'தொழிலாளர் நலத் துறை' இருந்தாலும் அதன் பயன்பாடு இவர்களுக்கு முறையாக போய்சேருவதில் இருக்கும் வழிதடங்களை சீர்படுத்தி, தான் உழைக்கும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு முழுபலமாய் இருக்கும் இந்த தியாகத்தொழிலாளர்கள் வாழ்க்கை வளம்பெற அவர்கள் மனநிம்மதியோடு வாழ ஆவன செய்யட்டும் இந்த ஆவணப்படம்!

இதுபோன்று பேலும் பலமுற்சிகளை முனைப்புடன் முன்னேடுத்துச் செல்லும் ஸ்கைலைன் மீடியா படக்குழுவினரை மனம்திறந்து பாராட்டலாம்.

-அ.அப்துல் வதூத் துபாய்