உளவியல் ஆசான் ஜி.ஆர்.
பல்லாயிரக்கணக்கான உளவியல் ஆலோசகர்களை அறிமுகப்படுத்திய ஜி.ஆர். என்று அன்பாக அழைக்கப்படும் பேரா.ஜி.இராஜமோகன் அவர்களின் கல்விப்பணி தமிழ் சமூகத்திற்கு ஒரு அருட்கொடை. சென்னை மாநிலக் கல்லூரியில் உளவியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்று உளவியல் துறைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.
எந்தப் பிண்ணனியில் இருப்பவரும் உளவியல் கல்வியைப் படித்து பட்டம் பெற்று பணியாற்றும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் மூலமாக M.Sc. (Counselling & Psychotherapy) ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் சிகிச்சை என்ற முதுகலைப் பட்டப்படிப்பை தொடங்கி இன்றைக்கு பல தரப்பு மக்களும் உளவியல் துறையில் ஈடுபட ஆர்வத்துடன் முன்வர காரணமாக இருப்பவர்.
குறைந்த கட்டணத்தில் பயிற்சி முகாம்களை நடத்துதல், மனோதத்துவ பாடபுத்தகங்களை தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரித்தல், ஹெல்த் அண்டு பியூட்டி என்ற மாத இதழின் மூலமாக அறிவுப்பூர்வமான கட்டுரைகளை வெளியிடுதல், மனோதத்துவ மற்றும் தாம்பத்திய மேம்பாட்டிற்கான கருத்தரங்குகளை நடத்துதல், உளவியலாளர்களுக்கான Association of Professional Psychologists என்ற அமைப்பை நடத்துதல் என 74 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்.
11 வருடங்களுக்கு முன்பு அவரை முதன் முதலாக நான் சந்திக்கும்போது எப்படி இருந்தாரோ அதை விட வீரியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் பேராசிரியர் அவர்கள். என்னை இந்த துறையில் ஈடுபடக் காரணமாக இருந்தவர். மற்றவர்களின் தனித்தன்மை அறிந்து அதை உற்சாகப்படுத்துவதில் வல்லவர். நான் எழுதிய குழந்தை மனசு என்ற புத்தகத்திற்கு பெருந்தன்மையுடன் சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி பேராசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த CBT பயிற்சி முகாமில் கலந்துக்கொள்ள சென்றிருந்த என்னை, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்து, பயிற்சித் துறையில் என்னுடைய வளர்ச்சியைக் குறித்து துபாயில் தொடங்கி இப்போது வரை உள்ள செயல்பாடுகளை விவரித்து பயிற்சியாளர் டாக்டர். சங்கர் அவர்களின் கைகளால் சால்வை அணிவிக்கச் செய்து மகிழ்வித்தார். அதை சற்றும் எதிர்பார்த்திராத எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
மனரீதியான பிரச்சனைகள் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில் பேராசிரியர் அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்!
அன்பில்,
Dr.ஹு
மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங்
Mobile.: 78712 64444